tamilnadu

img

ஜேஜே மருத்துவமனை டாக்டர்கள் அம்பலப்படுத்தினர் பிரக்யாவுக்கு புற்றுநோயும் இல்லை; கோமியத்தால் அது குணமாகவும் இல்லை..

போபால்: போபால் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருப்பவர் பிரக்யா சிங் தாக்குர். பெண் சாமியாரான இவர், மாலேகான் குண்டுவெடிப்பில் 8 ஆண்டுகள் சிறையில் இருந்தவர். தற்போதும் ஜாமீனில்தான் வெளியே வந்திருக்கிறார்.


இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு அண்மையில் பேட்டியளித்த பிரக்யா சிங், சிறையில் தனக்கு மார்பகப் புற்றுநோய்ப் பாதிப்பு இருந்ததாகவும், பஞ்சகாவ்யாவை (பசுவின் சிறுநீர்) தொடர்ந்து அருந்தியதால், புற்றுநோய் குணமாகி விட்டது என்றும் கூறியிருந்தார். பசுவின் முதுகை தடவிக் கொடுப்பதன் மூலம், மனிதர்கள் தங்களின் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.


பிரக்யா சிங்கின் பேச்சு, மருத்துவர்கள் மத்தியில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இன்னும் நிரூபிக்கப்படாத ஒரு சிகிச்சை முறையை, புற்று நோயாளர்கள் இடையே பிரக்யா சிங் பரப்புவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். தங்களின் கண்டனங்களையும் தெரிவித்தனர்.இதனிடையே, “பிரக்யா சிங்-கிற்கு புற்றுநோய் இருந்தால்தானே அது குணமாவதற்கு..? என்று மும்பையின் புகழ்பெற்ற ஜேஜே மருத்துவமனையின் மருத்துவர்கள் உண்மையைப் போட்டு உடைத்துள்ளனர்.


ஏனெனில், இங்குதான் பிரக்யா சிங்கிற்கு பரிசோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக, புற்றுநோய்க்கான பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அதன் முடிவில், “பிரக்யா சிங்கிற்கு, புற்றுநோய்க்கான எவ்வித அறிகுறியும் இல்லை” என்று மருத்துவமனைத் தலைவரான டாக்டர் டி.பி. லகானே என்பவர் அறிக்கையும் அளித்துள்ளார்.

இதனைத் தற்போது நினைவுபடுத்தியுள்ள ஜேஜே மருத்துவமனையின் மூத்த மருத்துவர் ஒருவர், “இல்லாத ஒரு நோயைக் கூறியும், கோமியம் அருந்தியதால் அது குணமாகி விட்டது” என்றும் பிரக்யா சிங் கூறியிருப்பது மோசடியானது என்று விமர்சித்துள்ளார்.


“மார்பகப் புற்றுநோய்க்கான ‘சி ஏ 125’ சோதனை பிரக்யாவுக்கு நடத்தப்பட்டது; அந்த சோதனையில் அவருக்கு புற்றுநோய் இல்லை என்று தெரியவந்தது; அத்துடன் அவருடைய எம்ஆர்ஐ ஸ்கேன், ஈசிஜி சோதனை அறிக்கைகளிலும் அவருக்கு எவ்வித நோயும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது” எனவும் அவர் கூறியுள்ளார்.இதன்மூலம் பாஜக வேட்பாளர் பிரக்யா சிங்-கின் புரட்டு, ஒருவாரம் கூட நிலைக்காமல் அம்பலப்பட்டு இருக்கிறது.


;